இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 89 நிறுவனங்களை பயன்படுத்தி பல மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை சுங்கத்துறையால் காவல்துறை மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின் போது, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் ஈட்டப்பட்ட பணம் பல்வேறு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டு பின்னர் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் உண்மையான மதிப்பை குறைத்து காட்டி சுங்க மற்றும் தீர்வை கட்டணங்களை தவிர்த்து, போலியான இறக்குமதி நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பணம் அனுப்பியுள்ளதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி பல்வேறு சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2023 ஜனவரி முதலாம் திகதி முதல் 2025 செப்டம்பர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், நாட்டில் பதிவு செய்யப்பட்ட 89 நிறுவனங்கள் ஊடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
தந்தி வழிப் பணப்பரிமாற்ற முறை (TT) மூலம் உள்ளூர் வங்கி அமைப்புகளை பயன்படுத்தி பெருந்தொகையான அமெரிக்க டொலர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அதற்குப் பதிலாக எந்தவொரு பொருட்களும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படாத நிலையில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக