நாட்டில் இதுவரையில் 95 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்

கடந்த 24 மணி நேரத்தில் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதன் விளைவாக ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (5) இரவு 11.45 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 26 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மஹவத்த மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிததுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மருதானை பஞ்சிகாவத்தை வீதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் முன்பாக இன்று (6) அதிகாலை 1.40 மணியளவில் மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
காயமடைந்த நபர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், இன்று அதிகாலை 1.38 மணியளவில் நீர்கொழும்பு குட்டுடுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளனர்.
நிதி தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அத்தோடு, பாணந்துறை, அலுபோமுல்ல, பமுனுகம திஸ்ஸ மாவத்தையில் உள்ள ஒரு கடையில் இன்று (6) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த ஆண்டில் மாத்திரம் 95 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கருதப்படுகிறது.
கடந்த முதலாம் திகதி(01.09.2025) மிட்டியகொடவின் மலவண்ண பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுடன் நாட்டில மொத்தம் 90 துப்பாக்கிச்சூடுகள் பதிவாகியிருந்தன.
அதன்பின்னர், கடந்த 3ஆம் திகதி( 03.09.2025) மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் மற்றும் இன்று இடம்பெற்ற 4 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் நாட்டில் மொத்தம் 95 துப்பாக்கிச்சூடுகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.