வீட்டில் தயிரும், பூண்டும் இருக்கா? அப்போ இந்த மோர் குழம்பு செய்து பாருங்க

நாம் எல்லோரும் பொதுவாக சாதத்திற்கு பல வகையான கறிவகைகளை செய்து சாப்பிட்டிருப்போம். அந்த வகையில் மோர் குழம்பு தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்று.
இதை தயிரில் இருந்து செய்வார்கள். இதை பலரும் அவர்களுக்கு பிடித்த வகையில் செய்வார்கள். வீட்டில் ஒன்றும் இல்லாத நேரம் தயிரும் பூண்டும் இருந்தால் அவற்றை வைத்து இந்த மோர் குழம்பு அட்டகாசமாக செய்யலாம்.
இதற்கு அதிக நேரமும் தேவைப்படாது 5 நிமிடங்கள் போதும். இதை சாதத்துடன் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் நீங்கள் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவீர்கள். அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும். இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலில் உரலில் பூண்டை போட்டு நன்கு தட்டிக் கொள்ள வேண்டும். பின் தட்டிய பூண்டு பற்களை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள், சீரகத் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கலந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
பின்னர் தட்டி வைத்துள்ள பூண்டு கலவையை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். இதன் பின்னர் 200 மிலி தயிரை எடுத்து, சிறிது நீரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் அந்த தயிரை வதக்கி வைத்துள்ள பூண்டுடன் சேர்த்து கலந்து, உப்பு சேர்க்க வேண்டும். இப்போது சுவையான பூண்டு மோர் குழம்பு தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் என எல்லோருக்கும் சூடான சாதத்தில் வைத்து பரிமாருங்கள்.