கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர வலம்புரிச் சங்கு வழிபாடுகள்!
கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர வலம்புரிச் சங்கு வழிபாடுகள்!
வலம்புரிச் சங்கு பூஜிக்கப்பட்டு வரும் இல்லங்களில், பிரம்மஹத்தி முதலான அனைத்துவகை தோஷங்களும் அகன்றுவிடும். வலம்புரி சங்கு இருக்கும் இடத்தில் சகல மங்கலங்களும் உண்டாகும் என்பது வேதவாக்கு.
வீடு கட்டுபவர்கள் கைப்பிடி அளவுள்ள வலம்புரிச் சங்கை நிலைவாசலில் வைத்து, வாஸ்து விதிப்படி சங்குப் பதிப்பு முறை செய்துவிட்டால், அவ்வீடு மூன்று தலைமுறைக் குச் செல்வச் செழிப்போடும் குபேர சம்பத் துடனும் விளங்கும் என்பது நம்பிக்கை.
ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடை பெறும்போது, யாக சாலைகளில் எண்வகை மங்கலப் பொருள்களில் ஒன்றாக வலம்புரிச் சங்கும் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்படும். கார்த்திகை மாத சோமவார (திங்கட்கிழமை) அபிஷேகக் காலங்களில், 108 சங்குகளுக்கு நடுவில் வலம்புரிச் சங்கு ஒன்றை வைத்து, சிவபெருமானாக வர்ணிக்கப்பட்டு பூஜிக்கப் படும். அபிஷேக ஆராதனைகள் செய்த பிறகு, சங்கு தீர்த்தத்தை நம் மீது தெளிப்பார்கள். சங்கு நீர் உடலில் பட்டாலே அனைத்து துர்சக்திகளும் நம்மை விட்டு விலகும் என்கிறது சாஸ்திரம்.
புராணங்களில் வலம்புரிச் சங்கு
அமிர்தம் வேண்டி தேவ-அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த 16 வகை தெய்விகப் பொருட்களில் வலம்புரிச் சங்கும் ஒன்று. அதை இடக்கையில் ஏந்தியபடி தோன்றிய மகாலட்சுமியை, திருமால் தமது வலக் கையில் பிடித்துக்கொண்டார் என்கின்றன புராணங்கள்.
கிருஷ்ணபரமாத்மா வைத்திருந்த சங்குக்கு பாஞ்சஜன்யம் என்று பெயர். குருகுல வாசம் முடிந்ததும் குருநாதர் சாந்தீபனி முனிவரிடம், “குருதட்சணையாக என்ன வேண்டும்?” எனக் கேட்டார் கிருஷ்ண பரமாத்மா. முனிவரும் அவரின் மனைவியும் தங்கள் ஒரே மகனை பஞ்சஜனன் எனும் அசுரன் கடத்தி கடலுக்குள் வைத்திருப்பதா கவும், அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டி னார்கள். கிருஷ்ணரும் அந்த அசுரனுடன் போரிட்டு குருவின் மகனை மீட்டு வந்தார். அந்த அசுரன் எரிந்து சாம்பலாகி ஒன்று திரண்டு சங்கு வடிவமானதால், அதற்கு `பாஞ்ச ஜன்யம்’ என்று பெயர்.
கண்ணனைப் போன்று பாண்டவர்கள் ஐவருமே ஒவ்வொரு வகையான சங்கை கொண்டிருந்தனர்: தருமர்- அனந்த விஜயம்; அர்ஜுனன்- தேவதத்தம்; பீமன்- மகாசங்கம்; நகுலன்- சுகோஷம்; சகாதேவன்- மணிபுஷ்பகம்.
கடலில் உருவாகும் சங்குகளில் பல வகை உண்டு. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு ஆகியவற்றில் வலம்புரியாகக் கிடைக்கும் சங்குகளுக்கு சக்தி அதிகம் என்கின்றன ஆகமசாஸ்திரங்கள்
திருப்பதி பெருமாள் மணிசங்கு கொண்டிருக்கிறார். இவரைப் போன்றே திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமி பாருத சங்கும், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் வைபவ சங்கும், திருக் கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் துயிலா சங்கும் கொண்டு திகழ்கிறார்களாம்.
பூஜிப்பது எப்படி?
வியாழக்கிழமை மாலையில் 5 முதல் 8 மணி வரையிலான குபேர காலம், வெள்ளிக் கிழமை காலை வேளை, பௌர்ணமி, திருவோணம் மற்றும் பூர நட்சத்திர நாட்களில் வலம்புரி சங்கு பூஜையைத் தொடங்கி, 32, 48, 54 அல்லது 63 நாட்கள் என்ற எண்ணிக்கையில் செய்து முடிக்கலாம்.
விபூதியால் தேய்த்து சங்கை சுத்தம் செய்ய வேண்டும். அதன் மேற்பாகம் குறைந்தது 8 சந்தனப் பொட்டுகள் வைக்கவேண்டும். பின்னர், வாசனைத் திரவியங்களான ஏலக் காய், ஜாதிக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ, துளசி, மஞ்சள் தூள் சிறிதளவு கலந்த நீரை சங்கினுள் இட்டு, மலர்களால் அலங்கரிக்கவேண்டும்.
அடுத்து ஷட்கோண கோலத்தின் மையத்தில் சிவப்புத் துணி விரித்து அதன் மீது சங்கை வைக்கவேண்டும். எதிரில் ஹ்ரீம் கோலம் போட்டு சுபம், லாபம் என்று எழுதி வைக்க வேண்டும். பின்னர் கணபதியை துதித்து, சங்கு வழிபாட்டைத் தொடரலாம். கீழ்க்காணும் போற்றித் துதிகளைச் சொல்லி வழிபடுவது விசேஷம்.
ஓம் நவநிதி தேவனே போற்றி
ஓம் செல்வத்தின் உருவமே போற்றி
ஓம் கடலினில் பிறந்தாய் போற்றி
ஓம் பரந்தாமன் கரமே போற்றி
ஓம் வெண்ணிறத்து மேனியே போற்றி
ஓம் திருமகள் நட்பே போற்றி
ஓம் ஐஸ்வர்ய இருப்பிடமே போற்றி
ஓம் ஆனந்த வடிவினனே போற்றி
ஓம் குபேரனின் இல்லமே போற்றி
ஓம் ஈஸ்வரன் விருப்பமே போற்றி
ஓம் ஏற்றம் தருவோய் போற்றி
என்று மலர்களைச் சமர்ப்பித்து போற்றி கூறி முடித்ததும் தூப-தீப ஆராதனைகள் செய்து வணங்கலாம்.
செவ்வாய் தோஷம் காரணமாக திருமணம் தடைப்பட்டு வருந்தும் பெண்கள், 8 செவ்வாய்க் கிழமைகள் வலம்புரிச் சங்கில் பால் வைத்து, அங்காரகனுக்கு செவ்வரளி மலர்களால் 108 நாமாவளி அர்ச்சனை செய்தால், கைமேல் பலன் கிடைக்கும்.
கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர 16 சங்கு வடிவங்களைக் கோலமாகப் போட்டு, பௌர்ணமி இரவில் குங்குமத்தால் அர்ச்சனை செய்து, குளிகை காலத்தில் கடன் கொடுத்த வரை சந்தித்து சிறிதளவு பணத்தைத் திரும்பக் கொடுத்தால், விரைவிலேயே முழுக்கடனும் அடைபடும்.