மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது யாழில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்! மூவர் கைது!
மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது யாழில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்! மூவர் கைது!
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று(07) காலை பளையிலிருந்து சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனம் புத்தூர் பகுதியில் வைத்து பொலிசாரால் இடைமறிக்கப்பட்டது.
வாகனம் மறிக்கப்பட்ட போது பொலிசாரை உதாசீனம் செய்த சாரதி வேகமாக சென்று புத்தூர் பிரதான வீதி ஊடாக சிறுப்பிட்டி, ஆவரங்கால் உள்ளிட்ட பல பாதையில் ஊடாக தப்பி சென்றுள்ளார்.
வாகனத்தை பின்தொடர்ந்து துரத்தி வந்த பொலிசார் பாடசாலை மாணவர்கள் பயணித்துக் கொண்டிருந்த புத்தூர் பிரதான வீதியை அடுத்து மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான டிப்பர் வாகனத்தின் டயர் மீது துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்ததில் சாரதி உட்பட இருவர் வாகனத்துடன் சேர்ந்து தடம் புரண்டனர்.
இருவரையும் காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்பு பொலிசார் கைதுசெய்தனர்.
பொலிசார் துரத்தி சென்ற போது டிப்பர் இடைவழியே ஏற்றி வந்த மணலை பறித்தவாறு சென்றதுடன் மீதமிருந்த மணல் வாகனம் தடம் புரண்ட இடத்திலேயே கொட்டிக் கிடந்தது.
இதன்போது பளைப்பகுதியைச் சேர்ந்த குறித்த டிப்பர் வாகனத்தின் உரிமையாளர் எனக் கருதப்படும் இளைஞரையும் அவ்விடத்தில் வைத்து காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்பு பொலிசார் கைது செய்தனர்.
இதில் கைதான மூவரும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.