2024 பொங்கல் வைக்க நல்ல நேரம் என்ன ?
2024 பொங்கல் வைக்க நல்ல நேரம் என்ன ?
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. தை மாதம் தொடங்கினாலே சுப நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கிவிடும். தை மாதத்தின் தொடக்கமே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கம் நம் மரபில் உண்டு.
உழவுத் தொழிலுக்கு உறுதுணை செய்பவர் சூரிய பகவானே. கண்கண்ட கடவுளான சூரியனின் ஆற்றலே மழை பொழியவும் நிலம் செழிக்கவும் பயிர் விளையவும் உயிர்கள் வாழவும் காரணமாகிறது. அப்படிப்பட்ட சூரிய பகவானுக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படும் பண்டிகையே பொங்கல் பண்டிகை.
சூரியனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. அந்த வகையில் சூரியன் காலச் சக்கரத்தின் முதல் ராசியான மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலத்தில் ஆண்டு தொடங்கும். இந்த ஆண்டை உத்தராயனம், தட்சிணாயனம் என இரண்டாகப் பிரிக்கிறார்கள். தை முதல் ஆனி வரையிலான மாதங்கள் உத்தராயனம் என்றும் ஆடி முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்கள் தட்சிணாயனம் என்றும் அழைக்கப்படுகின்றன. நமக்கு ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பது நம்பிக்கை.
2024 பொங்கல் வைக்க நல்ல நேரம் | Best time to celebrate Pongal in tamil
உத்தராயனம் தேவர்களின் பகல் பொழுது என்றும் தட்சிணாயனம் இரவுப் பொழுது என்றும் புராணங்கள் சொல்கின்றன. அந்த வகையில் தேவர்களின் பகல் பொழுதின் தொடக்கமான தை மாதத்தின் தொடக்கமே மகர சங்கராந்தி. சங்கராந்தி என்றால் நகர்தல் என்று பொருள். சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நகர்வதால் இந்தப் பெயர் ஏற்பட்டது.
பொங்கல் வழிபாடு என்பது ஒரு நாள் வழிபாடு அல்ல. பொங்கலுக்கு முன்தினமான மார்கழி மாதத்தின் கடைசித் திகதி போகிப் பண்டிகை என்று கொண்டாடுகிறோம். இது இந்திரனை வழிபடும் விழா என்கிறார்கள்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் இந்த நாளில் நிகழ வேண்டியது அவசியம் என்பது நம்பிக்கை.
போகி அன்று வேண்டாதவற்றை வெளியில் வைத்துவிட வேண்டும். மாறாக அவற்றை எரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
தை முதல் நாள் பொங்கல் பண்டிகை. அன்று சூரியனை வணங்கிப் பொங்கலிட்டு கரும்பு, பழங்கள், வெற்றிலை பாக்கு ஆகியன வைத்து வழிபட வேண்டும். வீட்டில் சூரிய ஒளிபடும் ஏதேனும் ஓரிடத்தில் இந்த வழிபாட்டைச் செய்வது மிகவும் சிறப்பு.
பூஜை செய்யும் இடத்தில் சந்திர, சூரியர்கள் கோலம் இட்டுக்கொள்ள வேண்டும். பொங்கல் பானையை நடுவே வைத்து சூரியனுக்கு தீபாராதனை காட்டிப்பின் நிவேதனம் செய்ய வேண்டும். பொதுவாக சர்க்கரைப் பொங்கல் செய்வதுவே வழக்கம். சில வீடுகளில் வெண்பொங்கலும் சேர்த்து செய்வார்கள்.
பொங்கல் வைக்க நல்ல நேரம்
15.01.2024 திங்கட்கிழமை அன்று பொங்கல் பண்டிகை வருகிறது. இந்த நாளில் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலமாக அமைகிறது. எனவே இது தவிர்த்த நேரத்தில் பொங்கல் வைக்கலாம். காலை 9.00 முதல் 10.00 மணிக்குள்ளும் மதியம் 12 முதல் 1 மணிக்குள்ளும் பொங்கல் வைத்து வழிபடலாம்.
இந்தப் பொங்கல் பண்டிகை அனைவருக்கும் சகல நலன்களையும் தரும் திருநாளாகத் திகழ உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.