உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி சுவிட்சர்லாந்து பயணம்!
![உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி சுவிட்சர்லாந்து பயணம்!](https://likedtamil.lk/wp-content/uploads/2024/01/Screenshot_20240113_110453.jpg)
உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி சுவிட்சர்லாந்து பயணம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-க்ளோஸ்டர்ஸில் இம்மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகப் பொருளாதார மாநாட்டின் வருடாந்த அமர்வில் கலந்துகொள்வதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.
உலகப் பொருளாதார மாநாடு என்பது, அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் நிகழ்ச்சி நிரல்களை வடிவமைப்பதற்காக உலகின் முக்கிய முடிவெடுப்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் ஒன்று கூடும் ஒரு உலகளாவிய தளமாகும்.
1,000 க்கும் மேற்பட்ட அரசாங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள், உலகளாவிய நிறுவனங்கள், சிவில் சமூகம், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, சுவிஸ் ஆசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பசுமை தொழில்நுட்ப மாநாட்டில் ஜனாதிபதி விக்கிரமசிங்க, “எரிசக்தி பாதுகாப்பான இலங்கையை நோக்கிய பாதையை வகுத்தல்” என்ற தலைப்பில் முக்கிய உரையை ஆற்றவுள்ளார் . சுவிஸ் ஆசிய வர்த்தக சம்மேளனத்துடன் இலங்கை முதலீட்டுச் சபை, ஏற்பாடு செய்துள்ள சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய வர்த்தக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம் ஜனாதிபதியின் விஜயத்தை ஒருங்கிணைக்கிறது” என அமைச்சு தெரிவித்துள்ளது.