நாடளாவிய ரீதியில் இன்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் இன்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கை!
பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்றும் இடம்பெறவுள்ளது.
இந்த நடவடிக்கை நேற்று அதிகாலை 4 மணி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, நுகேகொட, கல்கிசை, தங்காலை, காங்கேசன்துறை, வவுனியா உட்பட நாடளாவிய ரீதியில் 45 பொலிஸ் பிரிவுகளில் இந்த சுற்றிவளைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதற்கான அனைத்து கண்காணிப்பு பணிகளையும் 9 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்படி, நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 11 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய ஹசீஷ், கேரள கஞ்சா, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.
அத்துடன், இந்த நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தேடப்பட்டுவந்த 45 சந்தேக நபர்கள் உட்பட சுமார் 100 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இதேவேளை, சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்தினால், 24 மணிநேரமும் முறைப்பாடுகளைப் பெறுவதற்கான விசேட பிரிவு ஒன்று இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் இந்தப் பிரிவு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.