14 வயதுச் சிறுமியைக் கடத்தி வன்புணர்வு – 14 ஆண்டுகள் கம்பி எண்ணும் இராணுவச் சிப்பாய்!
14 வயதுச் சிறுமியைக் கடத்தி வன்புணர்வு – 14 ஆண்டுகள் கம்பி எண்ணும் இராணுவச் சிப்பாய்!
வவுனியா, நெடுங்கேணியில் 16 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்தார்.
இந்தச் சம்பவம் 2013ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி நடந்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்தப் பகுதியில் இராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றிய இராமச்சந்திர ஆரியரட்ண என்ற இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணை
சந்தேகநபருக்கு எதிராக வவுனியா நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து எதிரிக்கு எதிராக சட்டமா அதிபரால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், நேற்று வழக்குத் தீர்ப்புக்காகத் தவணையிடப்பட்டிருந்தது.
கடூழியச் சிறைத் தண்டனை
சிவில், பொலிஸ் சாட்சியங்கள் மற்றும் நிபுணத்துவ சாட்சியங்களின் அடிப்படையில் வழக்குத் தொடுநர் எதிரி மீதான குற்றச்சாட்டுக்களை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபித்துள்ளார். இரண்டு குற்றச்சாட்டுகளிலும் எதிரி குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார் என்று மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிறுமியை பாதுகாவலரின் பாதுகாப்பிலிருந்து கவர்ந்து அழைத்துச் சென்றார் என்று எதிரி மீதான முதலாவது குற்றச்சாட்டுக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உள்படுத்தினார் என்ற எதிரி மீதான இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபா இழப்பீட்டை எதிரி வழங்கவேண்டும் என்பதுடன், 5 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்தவேண்டும். செலுத்தத் தவறின் ஒரு வருட சாதாரண சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்று மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பை அறிவித்தார்.