அடுத்த ஆறு மாதங்களில் நாட்டில் கோழிப்பண்ணை தொழில் மீண்டும் புத்துயிர் பெறும்…! – விவசாய அமைச்சு

அடுத்த ஆறு மாதங்களில் நாட்டில் கோழிப்பண்ணை தொழில் மீண்டும் புத்துயிர் பெறும்…!
– விவசாய அமைச்சு
அடுத்த ஆறு மாதங்களில் நாட்டில் கோழிப்பண்ணை தொழில் மீண்டும் புத்துயிர் பெறும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஆசிய பிராந்தியத்தில் பறவைக் காய்ச்சல் இல்லாத ஒரே நாடாக இலங்கை இருப்பதால், கால்நடை உற்பத்திகளை சர்வதேச சந்தையில் ஊக்குவிக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் .
உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் கோழிப்பண்ணை தொழில் தொடர்பான பால் மற்றும் பிற விலங்கு உற்பத்திகளை அதிகரிப்பது தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் விவசாய அமைச்சில் நடைபெற்றது.
கடந்தாண்டு கால்நடைத் தீவன தட்டுப்பாடு, தாய் கால்நடை இறக்குமதிக்கு தடை, உரத் தட்டுப்பாட்டால் உள்நாட்டில் மக்காச்சோள உற்பத்தி குறைந்ததாலும், மக்காச்சோள இறக்குமதி நிறுத்தப்பட்டதாலும் கோழிப்பண்ணை உற்பத்தி குறைந்துள்ளது.
கடந்தாண்டு இறுதி வரை 36,000 தாய் விலங்குகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2022 நிலவரப்படி, 178,000 மெட்ரிக் தொன் மக்காச்சோளம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 2023 பெரும் போகத்தில் 300,000 மெட்ரிக் தொன் மக்காச்சோளத்தை இலக்காகக் கொண்டு சாகுபடி நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
2022/23 பெரும் போகத்தில் 60,000 ஹெக்டேர் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது, அரிசி போதுமான அளவு இருப்பு இருப்பதை உறுதிசெய்யும் அதே வேளையில் பழைய அரிசி மற்றும் நெல் கால்நடை தீவன உற்பத்திக்கு பயன்படுத்தப்படவுள்ளது.
தனியார் துறை பண்ணைகளில் தற்போது 1.5 மில்லியன் கோழிகள் இருப்பதும் தெரிய வந்துள்ள்து.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கோழி மற்றும் முட்டைகளுக்கு அதிக தேவை காணப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.