ஆளுநரை கடத்தி கொல்ல திட்டமிட்டவருக்கு 16 வருட சிறை தண்டனை
அமெரிக்காவின் மிச்சிகன் மாநில ஆளுநர் ‘ கிறெச்சன் விட்மரை’ கடத்தி கொலை செய்வதற்கு 2020 ஆம் ஆண்டு திட்டமிட்ட வலது சாரி குழுவொன்றின் தலைவர்களில் ஒருவரான , 39 வயதான அடம் பொக்ஸ் என்பவருக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
51 வயதான கிறச்சன் விட்மர் 2019 ஜனவரி முதல் மிச்சிகன் மாநில ஆளுநராக பதவி வகிக்கிறார்.
ஆளுநர் கிறச்சன் விட்மரின், கொவிட்19 தனிமைப்படுத்தல் கொள்கைகளுக்கு பதிலடியாக அவரை கடத்தி கொலை செய்வதற்கும், சிவில் யுத்தமொன்றை ஆரம்பிப்பதற்கும் இக்குழுவினர் திட்டமிட்டனர் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இக்குற்றச்சாட்டு தொடர்பில் அடம் பொக்ஸும், பெறி க்ரொப்ட் (47) என்பவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்திருந்தது,
இந்நிலையில், அடம் பொக்ஸுக்கு 16 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்ததாக அமெரிக்க நீதித்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.