யக்கல காரியாலயம் பலவந்தமாக கைப்பற்றல் கண்டனம் – விமல் வீரவன்ச

அரச நிர்வாக கட்டமைப்பில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியினர் இவ்வாறான செயற்பாட்டை முன்மாதிரியாகக் கொண்டு சட்டத்தை கையில் எடுத்தால் அரசியலமைப்புடனான சர்வாதிகார நிலைமை தோற்றம் பெறும் என்பதை சகல அரசியல் தரப்பினரும் கவனத்திற் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மக்கள் விடுதலை முன்னணியின் பிரதி அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட மேலும் 40 பேர் ,முன்னிலை சோசலிசக் கட்சியின் யக்கல பகுதியில் உள்ள கட்சி காரியாலயத்துக்குள் பலவந்தமான முறையில் நுழைந்து,காரியாலயத்தை பலவந்தமான முறையில் கைப்பற்றியுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மக்கள் விடுதலை முன்னணியின் இணைக்கட்சியாக செயற்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் காரியாலயத்தை பொலிஸ் மற்றும் அரச ஆதரவுடன் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் பலவந்தமான முறையில் கைப்பற்றியுள்ளமை ஜனநாயகத்தின் தன்மைக்கு பாரியதொரு அச்சுறுத்தலாக அமையும் என்பது எமது நிலைப்பாடாகும்.
பொலிஸாரும் மக்கள் விடுதலை முன்னணிக்கு சார்பாக செயற்படுகிறார்கள்.பிறரின் சொத்துக்களை பலவந்தமான முறையில் கைப்பற்றி, சொத்தின் உரிமையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று மக்கள் முன்னணி குறிப்பிடுவது பேச்சளவில் மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது.
அரச நிர்வாக கட்டமைப்பில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியினர் இவ்வாறான செயற்பாட்டை முன்மாதிரியாகக் கொண்டு சட்டத்தை கையில் எடுத்தால் அரசியலமைப்புடனான சர்வாதிகார நிலைமை தோற்றம் பெறும் என்பதை சகல அரசியல் தரப்பினரும் கவனத்திற் கொள்ள வேண்டும்.