சுயாதீனமாகச் சட்டம் அமுல்படுத்த மக்களுடன் இணைந்து செயற்படுங்கள் – பொலிஸ்மா அதிபர் அறிவுரை

159 ஆவது தேசிய பொலிஸ் தினத்தை முன்னிட்டு கொழும்பு பொலிஸ் மைதானத்தில் புதன்கிழமை (3) நடைபெற்ற விசேட நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் ஊடான ஒன்றிணைந்த பல சிறந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டல் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட பிரதான பொறுப்புக்கள் இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.
கடந்து வந்த 159 ஆண்டுகாலங்கள் பொற்காலம் என்று குறிப்பிட முடியாது. கடுமையான சம்பவங்கள், இரத்தம் மற்றும் உயிர் தியாகங்களுக்கு மத்தியில் தான் இந்த உறுதிப்பாடு நிலைத்திருக்கிறது.கடந்த கால அனுபவங்கள் மற்றும் நினைவுகளை மறந்து விட்டு எதிர்காலத்தை சிறந்த முறையில் கட்டியெழுப்ப முடியாது.
நாட்டுக்காக சேவையாற்றி உயிர்தியாகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூர்கிறோம்.கடமையின் போது சுமார் 3000 பொலிஸார் உயிரிழந்துள்ளார்கள்.அதேபோல் 900 பேர் வரையில் விசேட தேவையுடையவர்களாகியுள்ளார்கள். குற்றங்களில்லாத சமூக கட்டமைப்பை உருவாக்குவதற்கு பொலிஸ் சேவையில் கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸ் சேவைக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் செயற்படுவார்களாயின் அவர்கள் தம்மை திருத்திக்கொள்ள வேண்டும்.துர்நடத்தையான செயல்களில் ஈடுபட்ட 338 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக இதுவரையான காலப்பகுதியில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை பொலிஸ் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது.உலகளாவிய மட்டத்திலும் பொலிஸ் சேவையில் இவ்வாறான நிலையே காணப்படுகிறது.தேசிய பாதுகாப்பு, திட்டமிட்ட குற்றங்கள், சமூக வலைத்தளங்களுடனான குற்றங்கள், பாதாள குழுக்கள் மற்றும் அதனுடான போதைப்பொருள் வர்த்தகம்,பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக சித்திரவதைகள்,வீட்டு வன்முறைகள், வீதி போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியன எம்முன் உள்ள பிரதான சவால்களாகும்.
இந்த சவால்களுக்கு முகங்கொடுக்க கூடிய வழிமுறைகள் மற்றும் அதற்குரிய தொழில்நுட்ப வசதிகளை அடையாளப்படுத்தியுள்ளோம்.வரையறுக்கப்பட்ட நிதி கையிறுப்புடன் இந்த சவால்களை எதிர்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்டவர்களின் தரவு கட்டமைப்பை பேணல்,போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிரான சுற்றிவளைப்புக்கள், தமிழ் மொழியில் முறைப்பாடளிப்பதற்கு 107 அவசர பொலிஸ் சேவை இலக்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்தாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 1416 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 946கிலோகிராம் ஹெரோய்ன், 12,802 கிலோகிராம் கஞ்சா, 2869 கிலோகிராம் வேறு போதைப்பொருட்கள் உட்பட 3 இலட்சத்துக்கும் அதிகமான போதைபொருள் குழிசைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.வடக்கு மாகாணத்தில் இன்று(நேற்று) 720 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 17 பேர் இந்தாண்டு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டார்கள். போதைப்பொருள் வர்த்தகத்தில் முன்னிலையில் ஈடுபட்ட ஐந்து பேர் கடந்த வாரம் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்கள்.தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சகல தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்களின் ஒத்துழைப்பில்லாமல் பொலிஸ் சேவையை வெற்றிப்பெற செய்ய முடியாது. பொலிஸார் மக்களுடன் மக்களாகவே செயற்பட வேண்டும். பொலிஸ் சேவையில் காணப்படும் சம்பளம் மற்றும் பதவி உயர்வு, இடமாற்றம் உள்ளிட்ட முரண்பாடுகளுக்கு கட்டம் கட்டமாக தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.பொலிஸ் சேவையில் 35 ஆயிரம் பேருக்கான பற்றாக்குறை காணப்படுகிறது.அடுத்தாண்டு இந்த எண்ணிக்கை 45 ஆயிரமாக உயர்வடைய கூடும்.இதனை கருத்திற் கொண்டு இந்த ஆண்டு 5000 பேரையும், அடுத்தாண்டு 5000 பேரையும் சேவையில் இணைத்துக் கொள்ள முழுமையாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தலையீடுகள் மற்றும் ஏனைய அழுத்தங்களில்லாமல் சுயாதீனமாக சட்டத்தின் பிரகாரம் செயற்படுவதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. சட்டத்துக்கு அமைவாக செயற்படுங்கள் அதற்கு பொலிஸ்மா அதிபர் என்ற அடிப்படையில் முழுமையாக ஒத்துழைப்பேன் என்றார்.