ஆடை தொழிற்சாலையில் போதைப்பொருள் விற்பனை

கொழும்பில் ஆடை தொழிற்சாலை ஒன்றை நடத்திச் செல்லும் போர்வையில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கல்கிஸ்ஸை – இரத்மலானை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிலோ 5 கிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த ஒரு இலட்சம் ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட ஹேஷ் போதைப்பொருளின் மொத்த பெறுமதி ஒரு கோடி ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்மலானை பகுதியில் மாதந்தோறும் 30,000 ரூபாய் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட வீட்டில் இருந்து இந்தக் கடத்தல் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்த வீட்டைச் சோதனையிட்டபோது, மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்ட அதேநேரம், அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோகிராம் ஹேஷ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.