நேபாளத்தில் வன்முறை ;முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை !

நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள அரசாங்கம் விதித்த சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த போராட்டம், பெரும் வன்முறை மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்களில், முன்னாள் பிரதமர் ஜாலா நாத் கனலின் மனைவி போராட்டக்காரர்களால் உயிருடன் எரித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் ஜாலா நாத் கனலின் இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அப்போது வீட்டிற்குள் இருந்த அவரது மனைவி ராபி லக்ஷ்மி சித்ரகர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த போராட்டம், ஊழல் எதிர்ப்பு இயக்கமாக மாறியது. இதன் விளைவாக, பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி மற்றும் ஜனாதிபதி ராம் சரண் பவ்டெல் ஆகியோர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லங்கள், பாராளுமன்ற கட்டிடம் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகளுக்குத் தீ வைத்துள்ளனர். விமான நிலையம் அருகிலும் ஏற்பட்ட வன்முறை காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.