இளையோர் ஒருநாள் தொடரை இலங்கை சமப்படுத்தியது; பந்துவீச்சில் ஹாட்லி வீரர் ஆகாஷ் அபாரம்

கூல்ரிஜ் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது போட்டியில் விக்னேஸ்வரன் ஆகாஷின் அபார பந்துவீச்சுக்கு மத்தியில் 12 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கை, இரண்டாவது போட்டியில் ஒரு விக்கெட்டினால் வெற்றிபெற்றது.
இதற்கு அமைய 7 போட்டிகளைக் கொண்ட இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் 1 – 1 என சமப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாவது போட்டியில் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 10 ஓவர்களில் 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றிய விக்னேஸ்வரன் ஆகாஷ் இரண்டாவது போட்டியில் ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தி தொடர்ச்சியாக ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.
இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி 47.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவர் ஜொஷுவா டோர்ன் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 82 ஓட்டங்களைப் பெற்றதுடன் ப்றெண்டன் பூடூ 28 ஓட்டங்களையும் ஜோநதன் வென் லெங் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஆகாஷ் 3 விக்கெட்களையும் விரான் சமுதித்த 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கவிஜ கமகே 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 48 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 204 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
அணித் தலைவர் விமுத் தின்சார 45 ஓட்டங்களையும் சாமிக்க ஹீனட்டிகல 30 ஓட்டங்களையும் புலிஷ திலக்கரத்ன, சேனுஜ வேக்குனாகொட ஆகிய இருவரும் தலா 24 ஓட்டங்களையும் செத்மிக்க செனவிரட்ன ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஸக்கரி காட்டர் 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றெண்டன் பூடூ 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.